இலங்கை தமிழரசுக் கட்சியின் ‘குறைகேள்’ மக்கள் தொடர்பாடல் அலுவலகம் உடுவிலில் திறப்பு

Meiveli Media Team

இலங்கை தமிழரசுக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று யாழ்ப்பாணம்- உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது. கட்சியின் அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். இதன்போது சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் கடந்த பொது தேர்தலில் சரிவு ஏற்பட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு நாம் பல காரணங்களைக் கூறினாலும் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.

எமது அரசியல் இலக்கு என்ன என்பது ஒரே பாதையாக ஒரு சுயாட்சியை நோக்கி நகர்கின்றன கட்சியாக உள்ளது. இருப்பினும் கால ஓட்டத்தில் மக்களுக்கு தேவையான ஏனைய விடயங்கள் தொடர்பான தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இதனை விட மக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது வேலை வாய்ப்பு இல்லை என பலர் வெளிநாடு செல்கின்றனர். இளையவர்கள் வேலைவாய்ப்பு இல்லை என வெளிநாடு செல்கின்றனர்.எமது அரசியல் இலக்குடன் இப்படியான விடயங்களினூடாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு, சீ.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில்,  மக்களின் குறைகளை கேட்கின்ற அலுவலமாக மாத்திரம் இல்லாது மக்களுக்கும் எமக்கும் தொடர்பு ஏற்படுத்தும் அலுவலகமாக இது செய்யப்படும். மக்களுக்கு தேவையான விடயங்களை ஒன்றிணைந்து கூட்டுணர்வுடன் செய்கின்ற ஒரு முறையிலே எமது எதிர்கால இலக்குகள் இருக்கின்றன.

நமது கட்சியின் இலக்கும் அதுதான் எனவே அதை நோக்கி நாம் பயணிப்போம் எனத் தெரிவித்துள்ளார். நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன்,ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.