இலங்கையில் இருந்து ஈரானிய கடற்படைச் சிப்பாய்கள் நாட்டுக்கு திரும்பினர்
Meiveli Media Team

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 238 இராஜதந்திரிகள் மற்றும் ஈரானிய கடற்படைச் சிப்பாய்கள் நேற்று இரவு மீண்டும் ஈரானுக்குத் திரும்பியுள்ளனர். ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ மற்றும் ‘IRIS Bushehr” ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் தாக்குதலுக்கு உள்ளாகின. இதன்போது காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 238 ஈரானியர்களை இலங்கை கடற்படையினர் மனிதாபிமான அடிப்படையில் மீட்டுஇ இலங்கையில் அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்கியிருந்தனர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு ஈரானில் இருந்து வருகை தந்த விசேட விமானம் ஒன்றின் ஊடாக இவர்கள் அனைவரும் தமது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானியக் கப்பல்கள் மீதான தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாதிக்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலங்கை வழங்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பாதுகாப்பிற்கு ஈரான் அரசாங்கம் முன்னதாகத் தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் அனைவரும் ஈரானை நோக்கிப் பயணமாகியுள்ள நிலையில், குறித்த போர்க்கப்பல்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

