வளமான வடக்கு மாகாணம்’ என்ற எமது பொதுவான இலக்கை நாம் நிச்சயம் அடைவோம் : வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு செய்தி

Meiveli Media Team

மலரும் சித்திரைப் புத்தாண்டை உவகையுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  குறிப்பிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், இயற்கையோடு இணைந்ததாக,  சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் இந்தப் புத்தாண்டு, எமது பாரம்பரியத்தோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த ஓர் உன்னதத் திருநாளாகும். தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒரே நன்னாளில் இணைந்து கொண்டாடும் இப்பண்டிகையானது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் ஒரு சிறப்பான பாலமாக அமைகின்றது.

கடந்த கால சவால்களிலிருந்து மீண்டெழுந்து, நம்பிக்கையுடன் புதியதொரு வளமான எதிர்காலத்தை நோக்கி எமது வடக்கு மாகாணம் இன்று துரிதமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. உலகில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச்சூழலின் தாக்கம், மீண்டெழுந்து கொண்டிருக்கும் எம்மை மீண்டும் ஒரு நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும் இந்தச் சவாலான காலகட்டத்தில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் உறுதியான மற்றும் சிறப்பான தலைமைத்துவத்தால் இந்தப் பாதிப்பிலிருந்து எமது மக்களுக்கு விரைவான மீட்சி கிடைத்திருக்கின்றது.

நாட்டு மக்களின் மீது இயலுமானவரை பொருளாதாரச் சுமைகளைச் சுமத்தாமல் இருப்பதற்கான காத்திரமான நிவாரணங்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கின்றன. விவசாயம், கடற்றொழில், கல்வி, சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நாம் அடைந்து வரும் முன்னேற்றங்கள் இந்தப் புதிய ஆண்டில் மேலும் பலமடங்கு சிறக்க வேண்டும். பேதங்களை மறந்து, அனைவரினதும் ஒன்றுபட்ட உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் ‘வளமான வடக்கு மாகாணம்’ என்ற எமது பொதுவான இலக்கை நாம் நிச்சயம் அடைவோம். புதிய எதிர்பார்ப்புகளோடு பிறக்கும் இந்தச் சித்திரைப் புத்தாண்டு, உங்கள் அனைவரதும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் புதிய ஒளியையும் மகிழ்ச்சியையும் ஏற்றட்டும். கடின உழைப்பும், நேர்மறையான சிந்தனைகளும் எமது மாகாணத்தையும் நாட்டையும் பொருளாதார சுபீட்சத்தை நோக்கி இட்டுச்செல்லட்டும். அனைவருக்கும் அமைதி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த இனிய தமிழ் – சிங்களப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.