சமூக வலைத்தள இணையச் செய்திகளை தமது ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் திட்டம்

Meiveli Media Team

பேஸ்புக் , யூடியூப் ,மற்றும் எக்ஸ், போன்ற தளங்களில் உள்ள செல்வாக்கு செலுத்துபவர்கள்  மற்றும் போட்காஸ்டர்கள்  உட்பட பரந்த அளவிலான இணையச் செய்தி குரல்களையும் தமது ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , நாட்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்தது. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட செய்தி வெளியீட்டாளர்களுக்கு தற்போது பொருந்தும் ‘நெறிமுறைக் கோட்பாடுகளை’,’செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள்’ தொடர்பான உள்ளடக்கத்தைப் பகிரும் ‘வெளியீட்டாளர்கள் அல்லாத பயனர்களுக்கும்’ நீடிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது சாதாரண பயனர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் போட்காஸ்டர்களால் பகிரப்படும் செய்தி தொடர்பான பதிவுகள் மீது அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகத் தளங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘பாதுகாப்பான புகலிடம்’, எனப்படும் சட்டப் பாதுகாப்பைத்  தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், அரசாங்கத்தின் உத்தரவுகளையும் வழிகாட்டல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் டிஜிட்டல் உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் சுயாதீன செய்தி உருவாக்குநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகத் தளங்களில் அரசாங்கத்தின் தணிக்கை முறையை முழுமையாக அமல்படுத்த இவை வழிவகுக்கும் என்றும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்கு வைக்கவும் அதிருப்திக் குரல்களை ஒடுக்கவும் இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், தற்போதைய தகவல் தொழில்நுட்ப விதிகளை வலுப்படுத்தவும், போலிச் செய்திகள், வெறுப்புப் பேச்சு மற்றும் ‘டீப்ஃபேக், ஆகியவற்றைத் தடுக்கவுமே இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இது குறித்த பொதுமக்களின் கருத்துகளை ஏப்ரல் 14ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.