*வலுசக்தி அமைச்சருக்கு எதிராக பொல்துவ சந்தியில் பாரிய போராட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்பு*

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தி, பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் இன்று பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினால் அப்பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய வலுசக்தி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் குமார ஜயகொடி உடனடியாக பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்தார். அமைச்சரின் தோல்வியடைந்த கொள்கைகளால் மக்கள் இன்று வீதிகளில் இறங்கிப் போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், மக்களின் வலியை உணராத அரசாங்கத்திற்கு எதிராகத் தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர் இதன்போது சூளுரைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து திரண்டிருந்த பெருமளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி பொல்துவ சந்தியை முற்றுகையிட்டனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சக்தித் துறையில் நிலவும் தொடர்ச்சியான சிக்கல்களுக்கு அமைச்சரின் முறையற்ற தீர்மானங்களே காரணம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த போராட்டம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் வருகை காரணமாக பாராளுமன்ற நுழைவுப் பகுதியான பொல்துவ சந்தி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் பத்தரமுல்லை மற்றும் அதனைச் சார்ந்த வீதிகளில் பயணித்த வாகனங்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் அந்த இடத்தில் குவிக்கப்பட்ட போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் நெரிசலைச் சீர்செய்வதில் சிக்கல் நீடித்தது. அமைச்சரின் பதவி விலகல் குறித்து அரசாங்கம் உரிய தீர்மானம் எடுக்கும் வரை இவ்வாறான போராட்டங்கள் தொடரும் என போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.