அரசியல் கைதிகள் விடுதலை குறித்த NPP தேர்தல் வாக்குறுதி ஜனாதிபதிக்கு ‘நினைவூட்டப்பட்டது’
Meiveli Media Team
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னமும் நிறைவேற்றப்படாத அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் என்ற தேர்தல் வாக்குறுதியை, கைதிகளின் உறவினர்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மாத்திரமன்ற பௌத்த பிக்குகள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட மதகுருமார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ளனர்.
இலங்கையின் முன்னணி மனித உரிமை ஆர்வலர்களான அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் மற்றும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்களது குழுவொன்று, “தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்டமைக்கு அமைய நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்தல் தொடர்பாக” எனும் தலைப்பிலான மனுவொன்றை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்து, ஜனாதிபதிக்கு அவ்வாக்குறுதியை நினைவூட்டியுள்ளது.
![]()
இலங்கையில் அரசியல் கைதிகள் விவகாரம் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையாக உள்ளதோடு, நூற்றுக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவசரகாலச் சட்டம் மற்றும்/அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் குறித்து 324 கையொப்பங்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட அந்த மனு மூலம் நினைவூட்டப்பட்டுள்ளது.
![]()
“1970 மற்றும் 1980 ஆகிய தசாப்தங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு கிளர்ச்சிகள் முதல் 30 வருடங்களாக நீடித்த இன மோதல் வரையிலும், அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் அநியாயமாக இலக்கு வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சந்தர்ப்பம் வரையிலும், அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் பின்னரும், அரசாங்கம் போராட்டங்களையும் அரசியல் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்குவதற்கு ‘பயங்கரவாத சட்டங்களையும்’, அவசரகாலச் சட்ட விதிமுறைகளையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியது.” என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக அதிகாரி மஞ்சுள ஜயசிங்கவிடம் குறித்த மனு கையளிக்கப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இரண்டு தேர்தல்களின் போதும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையே இதுவரை நிறைவேற்றவில்லை என மேலும் குறிப்பிட்டார்.
“அரசியல் கைதிகள் சுமார் 10 பேர் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்கள் 15, 16, 20 வருடங்களாக இன்னும் தடுப்புக்காவலில் உள்ளனர். அவர்களில் இருவர் குற்றச்சாட்டுகள் இன்றி இன்னமும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய ஒரு தேர்தல் வாக்குறுதிதான் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்பது. அது நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் அவர்கள் வழங்கிய வாக்குறுதி. ஒன்றரை வருடங்கள் ஆகப்போகின்றன, அது இன்னும் நிறைவேற்றப்படாத ஒரு வாக்கு மீறலாகவே மக்களாகிய எமக்குத் தெரிகிறது.”
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் எஞ்சியுள்ள 10 பேரில் இருவரான 2009 ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட செல்வராஜா கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகிய இருவருக்கும் எதிரான வழக்குகள் இன்னும் விசாரணை இடம்பெறுவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இது சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னரே, அவர்களது வாழ்க்கையில் சுமார் இரண்டு தசாப்த காலத்தை சிறையில் கழிப்பதற்குச் சமமானது. தமது வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை காத்திருக்கும் அவர்கள் தமது இளமைக்காலம் முழுவதையும் முதிர் வயதின் பெரும் பகுதியையும் இழந்துள்ளனர்.”
தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், ஏனைய எட்டு கைதிகளும் பதினைந்து (15) வருடங்களுக்கும் மேற்பட்ட காலமாக சிறையில் உள்ளனர். அவர்களில் இருவர் சுமார் முப்பது (30) வருட காலம் சிறைவாசம் அனுபவித்து, பொலிசார், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஏனைய கைதிகளின் கொடூரமான சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தன்னிச்சையான தாமதங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனு மேலும் வலியுறுத்துகிறது.
அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஜனாதிபதிக்கு நெருக்கமான முன்னுதாரணம் ஒன்றும் நினைவூட்டப்பட்டுள்ளது.
“இந்த நடவடிக்கைக்கு முன்னுதாரணம் இல்லாமலில்லை. 1977 நவம்பர் மாதம், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன குற்றவியல் நீதி ஆணைக்குழுச் சட்டத்தின் (1971 மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்ய பயன்படுத்தப்பட்ட சட்டம்) கீழ் தண்டனை அனுபவித்து வந்த அனைத்து மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பை அறிவித்தார்.”
அரச ஒடுக்குமுறையை நேரடியாக அனுபவித்துள்ள இந்த அரசாங்கம், தமது முதிர் வயதில் பாதியை ஏற்கனவே சிறையில் கழித்துள்ள, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய 10 தமிழ் கைதிகளுக்கும் அதேபோன்ற நிபந்தனையற்ற விடுதலையை வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன், மேலே விபரிக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற் கொண்டு பின்வரும் கோரிக்கைகளை அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்:
![]()
1. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தல்
2. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்துக் கைதிகளினதும் வழக்குகளை மீளாய்வு செய்து துரிதப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கைதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தல் அல்லது நிபந்தனையின்றி விடுதலை செய்தல்
3. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு – சிலர் 15 வருடங்கள் வரை சிறைவாசம் அனுபவித்ததன் பின்னர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட அனைத்துக் கைதிகளுக்கும் நியாயமான மற்றும் விகிதாசார ரீதியான இழப்பீடுகளை வழங்குதல்.
4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்தல் மற்றும் தடை செய்யும் வரை அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்தல்.
5. முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை’ மீளப்பெறுதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பயங்கரவாதச் சட்டங்களை அறிமுகப்படுத்தவதில்லை என வாக்குறுதியளித்தல்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என, முத்திரை குத்தி அரசியல் கைதிகளை 15, 20, 30 வருடங்களாக தடுத்து வைத்திருப்பதன் மூலம் எவருக்குமே நீதி கிடைக்காது என ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இந்த அரசியல் கைதிகளில் சிலர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர் என்ற உண்மையையும் அங்கு வெளிக்கொணர்ந்தார்.
“இந்த 10 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள். ஏனெனில் அவர்களில் மூவர் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளனர். இது மனிதாபிமானத்துக்கும் மனிதநேயத்துக்கும் எதிரான பாவமாகும். எனவேதான், இந்த நிபந்தனையற்ற கோரிக்கையை முன்வைக்கிறோம், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.”
அவ்வாறு விடுதலை செய்ய முடியாத பட்சத்தில் அதற்கான காரணங்களை வினவுவதற்கு ஒரு கலந்துரையாடலையும் கோரியுள்ளதாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

