வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை அச்சுறுத்திய சுண்டிக்குள சம்மாட்டி
Meiveli Media Team

வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் கரைவலைத் தொழிலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘நாரா’நிறுவனம் மேற்கொண்ட ஆய்வைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தங்கரூபன் ஆகியோருக்குக் கரைவலை சம்மாட்டி ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழிலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துடன் இணைந்து நாரா நிறுவனம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டது.
மனித வலுவைப் பயன்படுத்துவதற்கும், உழவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குமான வேறுபாடுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இந்த ஆய்வினைச் செய்தி சேகரிக்கச் சென்ற வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மற்றும் சமாசத் தலைவர் தங்கரூபன் ஆகியோரை, சுண்டிக்குளம் பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபடும் சம்மாட்டி ஒருவர் வழிமறித்துக் கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். கரைவலைத் தொழில் தொடர்பான எதிர்மறையான செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாது என்றும், இத்தொழில் சார்ந்த பிரச்சினைகளில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறி அவர் மிரட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து சமாசத் தலைவர் தங்கரூபன் கருத்துத் தெரிவிக்கையில், ‘வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் சிறு மீனவர்கள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். எனவே, இதற்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும், நாரா நிறுவனத்தின் ஆய்வுக்கு முதல் நாள், உழவு இயந்திரங்களால் ஏற்பட்டிருந்த மண்ணரிப்பை மறைப்பதற்காகக் கரைவலைத் தொழிலாளர்கள் மணல் கொண்டு குழிகளை நிரப்பியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

