நுவரெலியாவிலும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு வைத்தியர்கள் போராட்டம் .
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, குறிப்பாக
சுகாதார அமைச்சகம் முன்னர் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை மீறி
உள்ளக மருத்துவப் பயிற்சி மருத்துவர் நியமனங்களை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (09) வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 48 மணி நேர வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினராலும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது வைத்தியசாலை வளாகம் முழுவதும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகளின் இந்த எதிர்ப்பு போராட்டம் காரணமாக வெளிநோயாளர் பிரிவு முற்றாக செயலிழந்து காணப்பட்டது மேலும் கிளினிக் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது இதில் அவசர சிகிச்சை பிரிவுகள் தவிர்ந்த ஏனைய சாதாரண நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தூர இடங்களில் இருந்துவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பலதரப்பட்டவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு தொடர்ச்சியாக வைத்தியர்களின் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

