அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஊழல் மற்றும் நிர்வாகத் தோல்விகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி விசேட ஊடக சந்திப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விசேட ஊடக சந்திப்பொன்று இன்றைய தினம் (09) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்த பிரேரணை குறித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா, தயாசிறி ஜயசேகர, திலித் ஜயவீர, டி.வி. சானக, ஹெக்டர் அப்புஹாமி மற்றும் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கமளித்தார்.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்குத் தேவையான தரமான நிலக்கரியைப் போதுமான அளவில் கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்தத் தவறியதன் மூலம், அமைச்சர் தனது முதன்மைக் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர். இந்த நிர்வாகத் தோல்வியானது நாட்டின் தேசிய வலுச்சக்தி பாதுகாப்பைப் பெரும் அபாயத்திற்குள்ளாக்கியுள்ளதோடு, அரச நிதிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அவர் முன்னதாக இலங்கை உரக் கம்பனியின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கை தொடர்பில், இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது.
இத்தகைய பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது நாட்டின் சட்ட இறையாண்மைக்கும், பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கும் இழுக்கானது என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், பாராளுமன்ற நடத்தைக் கோவையின் படி மக்கள் பிரதிநிதிகள் பொது நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என்ற விதிகளை அமைச்சர் குமார ஜயகொடி மீறியுள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சியினர், இவ்வாறான ஊழல் பின்னணியைக் கொண்ட ஒருவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல எனத் தெரிவித்தனர். இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் பிரதான கோரிக்கையாக அமைந்திருந்தது.


