தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்றாதீர்கள் -ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Meiveli Media Team

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய பாஜக அரசு வெளிப்படையாக எந்தத் தகவலும் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வருவதாக கடுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ‘தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தே தீர வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்விகள் பொறுத்தவரையில், தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பாஜக அரசு இதுவரை ரகசியம் காப்பது ஏன்? 2001-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடியும் செய்ய வேண்டும் என்ற தென் மாநிலங்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரதமரின் பதில் என்ன? ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? ‘ஏப்ரல் 29-க்குப் பிறகு சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுங்கள்’ என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை உதாசீனப்படுத்துவதில் உள்ள மர்மம் என்ன? அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறு என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் கூறியபோது, ‘இங்கு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது.

தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் முயற்சியை திமுக ஒருபோதும் அனுமதிக்காது. இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம். எங்களோடு பேசாமல், எங்கள் அனுமதியின்றி எந்த முடிவை எடுத்தாலும், உயிரே போனாலும் நாங்கள் அதற்கு உடன்பட மாட்டோம்!”தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்’ என்று எச்சரித்த முதலமைச்சர், தென்னக மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த விவகாரம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.