பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சேவைகளை நவீனமயமாக்க “1930” அவசர அழைப்பு இலக்கம் அறிமுகம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 161-ஆவது பெருமைக்குரிய ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொதுச் சேவைகளை நவீனமயமாக்கும் விசேட திட்டத்தின் கீழ் புதிய அழைப்பு மையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளத்தை வெளியிடும் நிகழ்வு நேற்று (07) திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தற்போதைய சவால்களை முறியடிக்க டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை இன்றியமையாதது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் பிரதான இலக்கான அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்த நவீனமயமாக்கல் திட்டம் நேரடி பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு போன்ற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், நீண்ட தூரம் அலுவலகங்களுக்கு வந்து வரிசையில் காத்திருப்பதற்குப் பதிலாக, வீட்டிலிருந்தே சேவைகளைப் பெற்றுக்கொள்ள இதன் மூலம் சந்தர்ப்பம் கிட்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் கருத்துத் தெரிவிக்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களம் என்பது வெறும் அரசாங்க அலுவலகம் மாத்திரமல்ல, இந்நாட்டுப் பிரஜை ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எழுதப்பட்ட வரலாறு மற்றும் சட்டப்பூர்வ அடையாளத்தைப் பாதுகாக்கும் இடமாகும் எனக் குறிப்பிட்டார். பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அழைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்களைப் பெறக்கூடிய பயனர் நட்பு இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு சேவைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு இடைவெளி காரணமாகப் பலர் இடைத்தரகர்களிடம் சிக்கி ஆவணங்களின் சட்டப்பூர்வத்தன்மை குறித்த சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில் “1930” என்ற அவசர அழைப்பு இலக்கம் மற்றும் புதிய இணையதளத்தின் ஊடாகச் சரியான தகவல்களை நேரடியாக வழங்கி, மோசடி நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வெளிப்படையான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பிறப்புப் பதிவு, வெளிநாட்டவர்களுடனான திருமணம் மற்றும் சொத்துப் பிரச்சினைகளின் போது எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு இந்த புதிய அழைப்பு மையம் மற்றும் இணையதளங்கள் ஊடாகத் தீர்வுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டம், இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்பிற்குள் ஏற்படும் புதிய தொழில்நுட்ப மாற்றத்தின் ஆரம்பமாக அமையும்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோகபண்டார, பதிவாளர் நாயகம் திரு. எஸ். ஜலதீபன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


