அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்த விரிவான தரவுகளை முன்வைத்தார்.
கல்வி அமைச்சின் ஊடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் குறித்து விளக்கிய அவர், பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 178,890 மாணவர்களுக்கு தலா 15,000 ரூபா வீதம் மொத்தம் 2,683.35 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் மேலதிகமாக 10,000 ரூபா நிதி உதவியையும் வழங்கி, ஒரு மாணவருக்கு வழங்கப்படும் மொத்த நிவாரணத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிவாரணக் கொடுப்பனவுகள் மற்றும் நஷ்டஈடுகள் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், 7,677 பயனாளிகளுக்கு வாடகை வீட்டு வசதிக்காக 347.97 மில்லியன் ரூபாவும், வாழ்வாதாரத்தை இழந்த 882 நபர்களுக்கு 113.97 மில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
துரதிர்ஷ்டவசமான மரணங்கள் மற்றும் சொத்துச் சேதங்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் 417 குடும்பங்களுக்கு 445.41 மில்லியன் ரூபாவும், முழுமையாகச் சேதமடைந்த 289 வீடுகளுக்கு 570 மில்லியன் ரூபாவும், பகுதியளவு சேதமடைந்த 5,392 வீடுகளுக்கு 1,374.92 மில்லியன் ரூபாவும் இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பித்தார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய அமைச்சர், 2025 ஆம் ஆண்டை ஒரு பொற்காலமாகக் குறிப்பிட்டதோடு, சுற்றுலாத்துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவான பயணிகள் வருகை தந்துள்ளதைக் கோடிட்டுக் காட்டினார். இதன் மூலம் அந்நியச் செலாவணி வருமானமாக 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு உற்பத்தித் துறை, துறைமுகம் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகள் துரித வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் வெளியிட்டார்.
சர்வதேச ரீதியில் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு நிலையங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இத்தகைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்குத் தட்டுப்பாடற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை நிரூபிக்கவே இந்த உத்தியோகபூர்வ ஆவணங்களைச் சபையில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்து அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.

