கந்தளாய் குளத்து காட்டுப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு: 1600 லீட்டர் கள்ளச்சாராயம் மீட்பு

கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

 

கந்தளாய் குளத்தை அண்டிய காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று மாலை (07) கந்தளாய் பொலிஸார் சுற்றிவளைத்து, அங்கிருந்த கள்ளச்சாராயத்தை அழித்ததுடன் உற்பத்தி நிலையத்தையும் தகர்த்துள்ளனர்.

கள்ளச்சாராய உற்பத்தி இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, மதுபானம் காய்ச்சுவதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,600 லீட்டர் கோடா திரவம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள்:

8 பரல்களில் சேமிக்கப்பட்டிருந்த 1,600 லீட்டர் திரவம்
மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் செப்புச் சுருள்கள்
உற்பத்திக்கான ஏனைய உபகரணங்கள்

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை கந்தளாய் பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம். சஞ்சீவ பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விசேட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

காட்டுப்பகுதியின் கடினமான நிலைமைகளையும் மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் தொடர்ந்துவருகின்றன.