மும்மொழிக் கொள்கையை வச்சி பரப்புரை செய்யத் தயாரா? பாஜகவிடம்   கேள்வி எழுப்பிய ஸ்டாலின்

Meiveli Media Team

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இப்படியான சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பாஜகவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கு வரும் பாஜக அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரா என்று அவர் கேட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ள முக்கிய கேள்விகள்:தமிழ்மண்ணில் நின்று ‘மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்’ என்று சொல்லி பிரச்சாரம் செய்யத் தயாரா? நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்கு தருவது எவ்வளவு? பாஜகவால் ஆளப்படும் ‘செல்லக்குழந்தை’ மாநிலங்களுக்கு தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் எப்சிஆர்ஏ சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா? அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா? இவற்றுக்கெல்லாம், எடப்பாடி பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ‘ஓனர்களிடம்’ பதில் பெற்றுத் தர முடியுமா? மேலும்,’கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?’ என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக, ‘தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!’ என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த எக்ஸ் பதிவு, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணியினருக்கு எதிரான திமுகவின் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பாஜகவின் மொழிக் கொள்கை, நிதி ஒதுக்கீடு, எப்சிஆர்ஏ சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களை மையப்படுத்தி அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தப் பதிவு தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.