“அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடுகளும் பொய்க் குற்றச்சாட்டுகளும்: நாமல் ராஜபக்ச கடும் விமர்சனம்”

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் போக்குகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத் தரப்பினரோ அல்லது ஜேவிபி உறுப்பினர்களோ ஏதேனும் சொத்துக்களைக் கொண்டிருந்தால், அதனை அவர்கள் “சமூக மூலதனம்” (Social Capital) என்று புதிய வரைவிலக்கணம் கொடுத்து நியாயப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, அரச ஊழியர்களோ அல்லது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளோ சொத்துக்களைக் கொண்டிருந்தால், அவை உடனடியாக “திருட்டுச் சொத்துக்கள்” என முத்திரை குத்தப்படுவதாகவும், இது ஒரு தெளிவான இரட்டை நிலைப்பாடு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த காலங்களில் அரசியல் மேடைகளில் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட உகாண்டாவிற்கு 18 பில்லியன் டொலர் கொண்டு சென்றமை, தங்கக் குதிரைகள் மற்றும் லம்போகினி கார்கள் தொடர்பான கதைகள் அனைத்தும் வெறும் பொய்க் குற்றச்சாட்டுகள் என்பது இப்போது நிரூபணமாகி வருவதாக அவர் தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சர்களும் கடந்த காலங்களில் முக்கிய பதவிகளில் இருந்தபோது மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களின் பொருளாதாரச் சுமைகள் குறித்துப் பேசிய அவர், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ள போதிலும், அரசாங்கம் முறையான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டதாகச் சாடினார்.

கொரோனா போன்ற பாரிய நெருக்கடி நிலவிய காலத்தில்கூட தமது அரசாங்கம் மக்களுக்கு 5,000 ரூபா நிவாரணத்தை வழங்கியதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார். மேலும், தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, தனது பெயரையும் கௌரவத்தையும் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தாம் கருதுவதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் உண்மை வெளிவரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எத்தகைய தேர்தல்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும், மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தித் தமது அரசியல் பயணம் தொடரும் என்றும் நாமல் ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார்.