கட்டுநாயக்கவில் 25 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு: வாகனப் புகையிரைப்பான்களுக்குள் மறைத்து கடத்தல்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Red Channel) கடமையிலிருந்த இலங்கைக் சுங்க அதிகாரிகள், நேற்றைய தினம் பேங்கொக்கிலிருந்து UL 403 ரக விமானம் மூலம் வருகை தந்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது, ராகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவரின் நடத்தையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர் கொண்டு வந்த பொருட்களை விரிவான சோதனைக்கு உட்படுத்தினர்.

குறித்த நபர் கொண்டு வந்த வாகனங்களின் புகையிரைப்பான்களுக்குள் (Silencers) மிகவும் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருந்த 25,550 கிராம் (25.5 கிலோகிராம்) எடையுள்ள ‘குஷ்’ ரக கஞ்சா போதைப்பொருள் இதன்போது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 255,500,000 (இருபத்தி ஐந்து கோடியே ஐம்பத்தி ஐந்து இலட்சம்) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன இலங்கைக் சுங்கப் பிரிவினரால் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.