வெசாக் பண்டிகையில் எழாத ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்’ தேவாலய திருவிழாவில் எழுமா?
Meiveli Media Team
![]()
“கமாண்டோ பங்களாவிற்கு முன்னால் உள்ள தேவாலயத்தின் திருவிழாவிற்கு அனுமதி பெறுவதற்காக நாங்கள் செல்லாத இடமில்லை, இங்குள்ள அரச அதிகாரிகள் எல்லாருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும். இன்று பாதுகாப்பு இல்லை என்று சொல்லி எங்களுக்கு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. நான் கட்டளைத் தளபதியிடம் ஒன்றைக் கேட்கின்றேன். பலாலி சந்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி வெசாக் விழா கொண்டாடினார்கள். அதுல இல்லாத பாதுகாப்பு, நாங்கள் ஒரு 500, 1000 பேரைத் திரட்டி திருப்பலியை செய்வதில் என்ன பாதுகாப்புப் பிரச்சினை எழப் போகிறது?”
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக தமிழ் மக்களின் தனியார் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியுள்ள அரசாங்கம், இதுவரையில் காணி உரிமையாளர்களுடன் எவ்விதமான வெளிப்படையான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை என, 2026 மார்ச் 27 ஆம் திகதி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் உறுப்பினர் தேவரட்ணம் அந்தனி சுபாஷ் வலியுறுத்தினார்.
“அரசாங்கத்தின் தேவைக்காக ஒரு காணி கையகப்படுத்தப்பட்டால், அதற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அது குறித்து காணி உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இன்று வரை இது தொடர்பாக எதுவும் செய்யப்படவில்லை. நாங்கள் கேட்பது இதுதான்: விமான நிலையத்தை விரிவாக்கம் செய்கிறீர்கள் என்றால், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கிறீர்கள் என்றால் அதற்கு காணிகளை வழங்க மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் அரசாங்கமும் அதிகாரிகளும் மக்களுடன் நேரடியாகப் பேசி விமான நிலையத்துக்குத் தேவையான காணியின் அளவைத் தெரிவிக்க வேண்டும். அதில் உள்ளடங்கும் காணிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மக்களுடன் பேச முடியும். ஏனைய காணிகளை விடுவிக்க முடியும். ஆனால் அரசாங்கம் இது பற்றி எங்களுடன் வெளிப்படையாகப் பேசவில்லை.”
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 1600 ஏக்கர் நிலப்பரப்பினை இராணுவத்தினர் பெரும்பாலும் விவசாய நடவடிக்கைகளுக்காகவும், அந்த விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையங்களை நடத்துவதற்கும் பயன்படுத்தி வருவதாக மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் உறுப்பினரான சுபாஷ் சுட்டிக்காட்டினார். இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் அப்பிரதேச தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதாக அவர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வலியுறுத்தினார்.
“இன்று கட்டளைத் தளபதி 2008 ஏக்கரில் 1600 ஏக்கருக்கும் அதிகமானவை அவர்களிடம் இருப்பதாகச் சொன்னார். அந்த 1600 ஏக்கர் காணியை வைத்துக்கொண்டு இராணுவம் என்ன செய்கிறது? பெரும்பாலும் விவசாய நடவடிக்கைகளையே செய்கின்றனர். அவ்வாறு விவசாயம் செய்து அவர்களின் நலன்புரி நிலையங்கள், சலூன்கள் மற்றும் சிறிய கடைகளைப் போட்டு அவர்களுடைய பொருள்களை விற்பனை செய்யும்போது, அங்கு உள்ள சாதாரண மக்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. உங்களுக்கு இது ஒரு சாதாரண பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால் இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.”
காணி விடுவிப்பு தொடர்பாக தற்போதைய ஜனாதிபதியும் அதேபோன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ள விதம் குறித்து யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தேவரட்ணம் அந்தனி சுபாஷ் இவ்வாறு நினைவுபடுத்தினார்:
“நாங்கள் ஒன்றே ஒன்றைக் கேட்கிறோம். காணிகளை விடுவிப்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவைச் சொல்லுங்கள்.
ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி இரண்டு முறை மயிலிட்டிக்கு வந்தார். அந்த நேரத்தில் மக்களின் காணிகள் மக்களுக்கே என்று தெரிவித்தார். இறுதியாக வந்தபோதும் அதையேதான் சொன்னார். நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோதும் ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் வைத்து உங்கள் காணிகளை விடுவித்துவிட்டுத்தான் மீண்டும் வந்து சந்திப்பேன் என வாக்குறுதி அளித்தீர்கள். இன்று வரை இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”
“மக்கள் 36 வருடங்களாக காணிகள் இன்றி இருக்கின்றார்கள். எனது தாய், தந்தை இறந்த பின்னர் அந்தக் காணியை எனக்குத் தருவதற்கு யார் இருக்கிறார்கள்?” என்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேள்வியெழுப்பிய தேவரட்ணம் அந்தனி சுபாஷ், காணிப் பிரச்சினை குறித்துக் கேட்பதற்கு இதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என வலியுறுத்தியதுடன், வலிகாமம் வடக்கு மக்களை கண்ணியமின்றி நடத்த வேண்டாம் எனவும் அக்குழுவிடம் மேலும் கோரிக்கை விடுத்தார்.
காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிடாவிட்டால், போராட்டப் பாதையில் இறங்குவதைத் தவிர காணிகளை இழந்தவர்களுக்கு வேறு வழியில்லை எனவும் அவர் அங்கு மேலும் வலியுறுத்தியிருந்தார்.

