பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது: அண்ணாமலைக்கு சீட் இல்லை
Meiveli Media Team

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே வேட்பாளர் பட்டியல் அமைந்திருந்தாலும்இ யாரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக 27 தொகுதிகளை கேட்டு வாங்கிய பாஜக, அந்தக் கூட்டணியில் கடைசி ஆளாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்கும் பணியில் பாஜக தீவிரமாக இருந்ததாகவும் தகவல்கள் பரவின. கடந்த முறை நெல்லையில் வென்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர். பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக முயற்சி செய்த போதிலும், நாகர்கோவில் தொகுதி மீண்டும் எம்.ஆர்.காந்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சியில் கடந்தமுறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரின் மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து, அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார். மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், மதுரை தெற்கில் ராம சீனிவாசனும், தஞ்சையில் கருப்பு முருகானந்தமும் போட்டியிடுகின்றனர்.
அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து 2024 மக்களவைத் தேர்தலில் களம் கண்ட பாஜக, பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, ஒரு தரப்பினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது .இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் பாஜகவின் செல்வாக்குக்கு பாதகம் உருவாகலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அண்ணாமலை மட்டுமல்லாமல் பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம் போன்றோரும் இம்முறை தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். வேட்பாளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, ‘ஒரு தொண்டனாக பாஜகவின் வெற்றிக்கு உழைப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெற பாடுபடுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

