நிலக்கரி மோசடியை மறைக்க மக்கள் மீது மின் கட்டண சுமை சுமத்தப்படுகிறது: நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு விசேட கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி மோசடி காரணமாக நாடு பாரிய மின்சார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
இந்த ஊழலினால் நாடு இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் மக்கள் மின்சாரம் இன்றி ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இந்த மோசடிகளை மறைப்பதற்காகவே மின் கட்டண அதிகரிப்பு மூலம் மக்கள் மீது சுமை சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான அறிக்கை வெளியாகி மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காத விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட பின்னரே அங்கு சென்று உண்மைகளை மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் சாடினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும், அந்த காலப்பகுதியில் பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான கூட்டணியை உருவாக்கும் என்றும் தெரிவித்தார். உயிர்த் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உதய கம்மன்பிலவின் வெளிப்பாடுகள் தரவுகளின் அடிப்படையிலானது எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் தேர்தலை நடத்த அஞ்சுவதாகவும், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தாம் அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழமை போல இம்முறை புத்தாண்டு கொண்டாட்டங்களை தங்காலை கார்டன் இல்லத்தில் முன்னெடுப்பார் என்றும் அவர் கூறினார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் கூறிய பொய்களை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எளிய வாழ்க்கை வாழ்வதாகக் கூறிக்கொண்டவர்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதை மக்கள் அவதானித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தற்போதுதான் ஆரம்பமாகியுள்ளதாகக் கூறினார்.
எதிர்க்கட்சிகள் எப்போதும் ஒரு கூட்டணியாகவே செயற்பட்டு வருவதாகவும், தமது ஒற்றுமையைச் சீர்குலைக்க விடுக்கப்படும் சவால்களுக்குத் தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகேவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

