கொழும்பு சுற்றுப்புற பகுதிகளுக்கான நீர் இன்னும் 20 நாட்களுக்கே போதுமாது:தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கவலை

Meiveli Media Team

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குப் பிரதானமாக நீர் விநியோகம் செய்யும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் 20 நாட்களுக்கும், லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்குமான நீர் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளது. எதிர்வரும் 2-3 வாரங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கலட்டுவாவ நீரின் ஆயுட்காலத்தை 30 அல்லது 40 நாட்களுக்கு நீட்டிப்பதற்காக, உற்பத்தித் திறனைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியாவசிய அரச நிறுவனங்களுக்குத் தடையின்றி நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியுள்ளதால், ஏனைய பகுதிகளில் நீர் விநியோகக் கோளாறுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் நீர் நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களை நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.