அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாத சட்ட வரைவு: மனித உரிமை சீர்திருத்தத்தில் தயக்கம் – சர்வதேச ஆய்வாளர் எச்சரிக்கை
Meiveli Media Team

இலங்கையில் அரசாங்கம் முன்மொழிந்துள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ குறித்து உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1979ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது சர்வதேச மனித உரிமை தரநிலைகளுக்கு ஏற்ப இல்லையென பல தரப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. நெதர்லாந்தை தளமாகக் கொண்ட டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ, இந்த சட்ட வரைவு அரசாங்கத்தின் சீர்திருத்த தயக்கத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இது பயங்கரவாத செயல்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பரந்த வரையறை, அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தை குறிவைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்படும் விசாலமான அதிகாரங்கள் தன்னிச்சையான கைது, தடுத்துவைப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், போருக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட இடைக்கால நீதிச்செயல்முறைகளையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான இலங்கையின் வாய்ப்புகளும் ஆபத்துக்கு உள்ளாகலாம். இந்த நிலையில், அரசாங்கம் சட்டத்தை மறுபரிசீலனை செய்து சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

