ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி : எதிர்க்கட்சிகளின்  கூட்டணி பங்கேற்பு

Meiveli Media Team

‘பிவிதுரு ஹெல உறுமய’ கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி’ எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கலந்துகொண்டமை அரசியல் அரங்கில் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, வாசுதேவ நாணயக்கார, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சொனிக் சொனிக்’  என்ற புனைப்பெயரைக் கொண்ட ஒருவரே ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இவ்வாறான பின்னணியில், கம்மன்பிலவின் ‘சூத்திரதாரியை வெளிப்படுத்தும்’ நிகழ்வில் அவர்கள் பங்கேற்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் பரந்ததொரு கூட்டணி உருவாவதற்கான ஒரு முன்னோடியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கொழும்பு ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மந்திர மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய உதய கம்மன்பில, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமே தவிர வேறு எவருமில்லை எனத் தெரிவித்தார். வஹாப் தீவிரவாத மௌலவியான சஹ்ரான், முதலில் 2019 ஆகஸ்ட் மாதம் கண்டி தலாதா பெரஹரா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் நியூசிலாந்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கவே 2019 ஏப்ரலில் இந்தத் தாக்குதல் முன்கூட்டியே நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்த மெகா திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நிதியுதவிகளை மொஹமட் இப்ராஹிம் வழங்கியதாக கம்மன்பில இதன்போது வலியுறுத்தினார். சர்வதேச ஐஎஸ்ஸ ஐஎஸ. அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையின் தலைவராகச் சஹ்ரான் இதனை வழிநடத்தியிருந்தால், அவரே சூத்திரதாரி என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சஹ்ரான் ஹாஷிமின் கொள்கைகளை உள்வாங்கிய மேலும் 300 தீவிரவாத தற்கொலை குண்டுதாரிகள் சமூகத்தில் இருக்கலாம் என்பதால், அவர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கம்மன்பில எச்சரித்தார். சுமார் 50, 000 பக்கங்கள் கொண்ட ஐந்து விசாரணை அறிக்கைகளைப் பரிசீலித்த பின்னரே தான் இந்த நூலை எழுதியதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து யாருடனும் விவாதிக்கத் தயார் என்றும் சவால் விடுத்தார்.