நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடி: அரசாங்கத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்
Meiveli Media Team

நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடி, மின்கட்டண உயர்வு மற்றும் தரமற்ற நிலக்கரி இறக்குமதி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் நாராஹேன்பிட்டியில் உள்ள இல்லத்தில் நேற்று மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் போது, இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக மின் உற்பத்திக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தல். எவ்வித நியாயமான காரணமுமின்றி எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராகக் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்தல். ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கையிருப்புகளுக்கு விலையை உயர்த்தியமைக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கூட்டு எதிர்க்கட்சியினால் ‘திசைக்காட்டியின் தரமற்ற நிலக்கரி’ எனும் தலைப்பில் நாடு தழுவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவிசாவளையில் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு வெற்றியளித்ததைத் தொடர்ந்து, அடுத்த கருத்தரங்கை மே மாதம் தொடக்கத்தில் மாத்தறையில் நடத்த முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
மாத்தறையைத் தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இக்கருத்தரங்குகள் நடைபெறும். மின்கட்டண உயர்வு மற்றும் தற்போதைய பொருளாதாரச் சுமை குறித்து விளக்கமளிக்கக் கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை ஏப்ரல் 01 விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவும் தீர்மானித்துள்ளனர். பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன் நடைபெற்ற இச்சந்திப்பில் நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, தலதா அத்துகோரள, சாகல ரத்னாயக்க, மனோ கணேசன், ரோஹித அபேகுணவர்தன, பிரேமநாத் சி தொலவத்த, சுகீஸ்வர பண்டார, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, நிமல் லான்சா உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

