புரட்சிக்குரல் 2026 – குரல் தேர்வு
Sathees Navaratnam

தமிழீழ தேசிய கானங்களை எங்களின் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட “புரட்சிக்குரல்” என்ற பாடல் போட்டியின் முதல் தேர்வான குரல் தேர்வு நேற்று முன்தினம் (28/03/26) எழுச்சியுடன் நடைபெற்றது.

தென்கிழக்கு இலண்டன் பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறுவர்கள், இளையோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மங்கள விளக்கை சங்கீத ஆசிரியர் திருமதி மேனகா சுரேஸ், திரு சுரேஸ், இசைக் கலைஞர் திரு அருள் மற்றும் ஈழத்து இசைக் கலைக்கூட உறுப்பினர்கள் ஏற்றி வைத்தனர். அதனை தொடர்ந்து பிரித்தானியா கொடியும் தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றப்பட்டன.

நிகழ்வின் முதல் நிகழ்வாக தமிழீழ போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த எம் உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
நீண்ட காலத்திற்குப்பின் இப்படி ஒரு நிகழ்வை நடாத்த இருந்த அமைப்பாளர்கள், குறுகிய காலத்தில் இந் நிகழ்வை ஒழுங்கமைத்தமையால் காலதாமதமாக வந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் இந் நிகழ்வுக்கு பலர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று பிரிவுகளாக நடந்த இந்த குரல் தேர்வில் முதலாவதாக மாமனிதர் சாந்தன் அண்ணாவின் பிரிவினர் (26 வயதிற்கு மேற்பட்ட), அவர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த பாடல்களை மிகவும் உணர்ச்சி பூர்வமாக பாடினார்கள்.
அவர்களை தொடர்ந்து குட்டிக் கண்ணன் பிரிவினர் (10 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்) தங்கள் பிஞ்சுக்குரலில் எங்கள் தமிழீழ தேசிய கானங்களுக்கு உயிர் கொடுத்தனர்.
இறுதியாக சிட்டு அண்ணா பிரிவினர் (16 தொடக்கம் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்) விடுதலையை நாடும் உணர்வுடன் தங்கள் கானங்களை எங்கள் மனதில் பதிய வைத்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கிய ஈழத்து இசைக் கலைக்கூடத்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடக்க வேண்டும் என்றும் வாழ்த்தினர்.
19 ஆம் திகதி ஏப்ரல் மாதம் இந்த போட்டியின் முதல் சுற்றும் 2 ஆம் திகதி மே மாதம் இறுதி போட்டியும் நடைபெறுகின்றது.
இப்படியான நிகழ்வுகள் தாயக பாடல்களை தொடர்ந்தும் மக்களிடம் நிலையாகவும் நிறைவாகவும் உணர்வாகவும் கொண்டுசெல்ல மிக உறுதுணையாக அமையும் என்பது இங்கு குறிப்பிடவேண்டிய விடயம்.


