“குற்றவாளிகளை நாடுகடத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு: காவல்துறை ஊடகப் பேச்சாளர் ASP சட்டத்தரணி F.U. வூட்லர் விசேட விளக்கம்”
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை, சர்வதேச பிடியாணை (Red Notice) இல்லாமலேயே இலங்கைக்கு கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் காவல்துறை மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, இன்றைய தினம் ஓமான் நாட்டில் வைத்து தென் மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கொலை, சட்டவிரோத ஆயுதக் கடத்தல் மற்றும் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் மீதான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. மேலும், கடந்த 28ஆம் திகதி இந்தியாவில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 2026 ஜனவரி மாதம் 4 கிலோவிற்கும் அதிக கொக்கெய்ன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏப்ரல் 4ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, புனித வாரத்தை (Holy Week) முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்க காவல்துறை மா அதிபர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறும் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கோ அல்லது பங்குத்தந்தைகளுக்கோ அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் முப்படையினர் மற்றும் சிவில் உடையில் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் பொருளாதார சவால்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த 27 சந்தேக நபர்கள் கடந்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 44,811 லீட்டர் டீசல், 2,668 லீட்டர் பெட்ரோல் மற்றும் 2,062 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டிற்காக காவல்துறை திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 7,000 புதிய அதிகாரிகள் மற்றும் 100 சட்டத்தரணிகளை உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) பதவிக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2482 மற்றும் 2477) வெளியிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 08 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேலதிக விபரங்களுக்கு 071-8591925, 011-2505202 மற்றும் 011-2552953 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. என இன்றைய தினம் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ASP சட்டத்தரணி F.U. வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

