கப்பலில் இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் தருவதாகக் கூறிவிட்டு, மக்களை ஏமாற்றுகிறது அரசாங்கம் – எஸ்.எம். மரிக்கார் குற்றச்சாட்டு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

2024 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மூலம் மக்களைச் சுரண்டி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இன்றைய தினம் (30) எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குற்றம் சுமத்தினார்.
முன்னாள் எரிசக்தி அமைச்சரின் தரகுப் பணத்தைக் குறைத்து, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கு எரிபொருளை வழங்க முடியும் என ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க அன்று கூறினாலும், இன்று ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 128 ரூபாய் வரி அறவிடப்பட்டு, 400 ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். திறைசேரியில் ஒரு டிரில்லியன் ரூபாய் இருப்பதாகக் கூறும் அரசாங்கத்திற்கு, உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால் இந்த வரியைக் குறைத்து நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் அரசாங்கம் தனது போலி முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம், இன்று அதனைப் படிப்படியாக அதிகரித்து வருவதுடன், பாரிய நிலக்கரி ஊழல் ஒன்றுக்கும் வழிவகுத்துள்ளதாக மரிக்கார் சாடினார்.
நிலக்கரி கொள்வனவுக்கான டெண்டர் காலம் 42 நாட்களில் இருந்து 21 நாட்களாகக் குறைக்கப்பட்டதுடன், தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டுவர முறையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாதாரண விலையான 98.50 டொலருக்குப் பதிலாக, அவசர கொள்வனவு என்ற பெயரில் ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரி 142 டொலருக்குக் கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம், ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 43.50 டொலர் மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முறையற்ற கொடுக்கல் வாங்கல்களால் நாட்டுக்கு சுமார் 25,000 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு ஜனாதிபதியே நேரடிப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய மரிக்கார், ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரை அமைச்சுப் பதவியில் வைத்திருப்பது பாரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமைச்சர் குமார ஜயகொடி மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல என்றும், அவர் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் என்பதாலேயே தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் கொண்டுவரப்பட்டு நாட்டின் முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவரால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கான நட்டத்தை ஜனாதிபதியோ அல்லது ஜே.வி.பி நிதியமோ செலுத்தப்போவதில்லை, மாறாக அப்பாவி மக்களே அதனைச் சுமக்க வேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், அந்த இடைவெளியை நிரப்ப டீசல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகளவு டீசல் வழங்கப்படுவதால், பொதுமக்கள் மீண்டும் எரிபொருள் வரிசைகளில் நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இறுதியாக, இவ்வளவு பாரிய நட்டத்தை நாட்டுக்கு ஏற்படுத்திய அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கும் மனசாட்சி அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களுக்கு இருக்கிறதா என ஐக்கிய மக்கள் சக்தி அறிய விரும்புவதாக எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

