அன்று பாதுகாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று ஆபத்தில்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அன்று வெற்றிகொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று ஓரளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் நமது நாடு ஐந்து சோகமான சம்பவங்களை எதிர்கொண்டன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடக்கம் மத்திய கிழக்கு போர் வரையிலான சம்பவங்களால் தேசிய பாதுகாப்பு அனைத்து வகைகளிலும் இல்லாது போயுள்ளது எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர ஜயசேகராம விகாரையில் இன்று இடம்பெற்ற ரஜவத்தே வப்ப தேரருக்கு மியன்மாரின் அக்கமஹா சத்தம்ம ஜோதிக தஜ கௌரவ நாமம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இராணுவ ரீதியிலான பாதுகாப்பு மட்டுமல்லாது, பொருளாதார, சமூக, அரசியல், சுகாதார, கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளன. அன்று தேசிய பாதுகாப்பிற்காக மகா சங்கத்தினர் பெற்றுத் தந்த தலைமைத்துவத்தை தற்சமயத்திலும் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று நடந்த ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் பாப் அல் மந்தப் நீரிணையே மூடப்படும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. இதனால் நமது நாட்டுக்கு மீண்டும் பல்வேறு பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல் எரிபொருள் வரை அனைத்து துறைகளிலும் இது பேரிடராக மாறும். இந்நேரத்தில் அரசியலை விடுத்து மத தலங்களை மையமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

முப்பது ஆண்டுகால யுத்த காலத்தில் மகா சங்கத்தினர் கிராமிய நகர மக்கள் மத்தியில் பிளவுகளை நீக்கி மத தலங்களை மையமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் தைரியமாக செயலாற்றினர். இன்றும் அதைவிட பெரிய சவால் உருவாகியுள்ளதால், இதற்காக வேண்டி நாமனைவரும் அணிதிரள வேண்டும். நாட்டிற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதால் மகா சங்கத்தினர் தலைமையில் சக மத தலைவர்களை முன்நிறுத்தி ஒன்றிணைந்து இந்த பேராபத்துக்களில் இருந்து மீளவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நமது நாட்டிற்கு அறிவுத் திறன்வாய்ந்த வளம் காணப்படுவதனால், தைரியமும், அர்ப்பணிப்பும் காணப்படுவதனால் இந்த சவால்களை நாம் ஒன்றாய் இணைந்து வெல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.