இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தியும் சித்திரத்தேர் இரதோற்சவமும் கோலாகலம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு 4 – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள “இந்துக் கல்லூரி கொழும்பு” வளாகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மங்களகரமான சித்திரத்தேர் இரதோற்சவப் பெருவிழாவும் நேற்றைய தினம் (28.03.2026) சனிக்கிழமை மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றன. விசுவாவசு வருடம் தை மாதம் 25-ஆம் நாள் (08.02.2026) ஞாயிற்றுக்கிழமை இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் ஆகம முறைப்படி நடைபெற்று வந்த மண்டலாபிஷேக பூஜைகளின் நிறைவு விழாவான நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் விசேட அபிஷேகங்களும் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜைகளும் இடம்பெற்றன.
நேற்று மாலை 5.00 மணியளவில் விசேட பூஜைகள் நடைபெற்று, அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் வித்தக விநாயகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மங்கள வாத்தியங்கள் முழங்க தேர்ப்பவனி ஆரம்பமான நிலையில், அதில் கல்லூரியின் கலாச்சார பேண்ட் வாத்தியக் குழுவினரின் மிடுக்கான அணிவகுப்பு விழாவிற்கு கம்பீரமான சூழலை ஏற்படுத்தியது. அத்துடன், இந்துக் கல்லூரி கொழும்பு ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மிகச் சிறந்த முறையில் பல்வேறு கடவுள் வேடங்களைத் தரித்து மேற்கொண்ட அணிவகுப்பு காண்போரைக் கவர்ந்ததுடன், விழாவிற்கு கூடுதல் மெருகூட்டியது.

மேலும், மாணவர்களின் தேவார பாராயண பஜனைப் பாடல்களின் பக்திபூர்வமான அணிவகுப்புடன் விநாயகப் பெருமானின் சித்திரத்தேர் லோரன்ஸ் வீதியிலிருந்து புறப்பட்டு காலி வீதி, டிக்மன் வீதி, டுப்ளிகேஷன் வீதி, மக்ளியட் வீதி மற்றும் லயாட் வீதி வழியாக நகர் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தது.
வீதியெங்கும் திரண்டிருந்த அடியார்கள் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டதுடன், மீண்டும் லோரன்ஸ் வீதி வழியாக சித்திரத்தேர் ஆலயத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட பூஜைகளுடன் மண்டலபூர்த்தி விழா சிறப்பான முறையில் நிறைவுபெற்றது.

இந்துக் கல்லூரி கொழும்பு தனது 75 ஆண்டுகால கல்விப் பணியின் (75 Years of Legacy) மைல்கல்லைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில், இக்கோவில் திருவிழா நடைபெற்றமை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்வில் பாடசாலை முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதிவாழ் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு இறைவனின் திருவருளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலைச் சமூகம் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.


