அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை; நாடு பாரிய ஆபத்தை நோக்கிச் செல்கிறது: சஜித் பிரேமதாச எச்சரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கம் நாட்டின் நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான எந்தவொரு முறையான திட்டங்களையும் இதுவரை வகுக்கவில்லை என்றும், இதனால் நாடு பாரிய ஆபத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
களனிப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப செயற்பட அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்கா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச அரசியல் மாற்றங்களை அவதானித்து, வினைத்திறனான ஒரு அரசாங்கம் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இந்த அரசாங்கம் சர்வதேசக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளாமல் மெத்தனமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் மின்சக்தித் துறை கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, நுரைச்சோலை மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிலக்கரி மோசடியை மூடிமறைக்கவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிட்டு வருவதாகவும், இதன் சுமை ஒட்டுமொத்த நுகர்வோர் மீதும் சுமத்தப்படுவதாகவும் அவர் சாடினார். தரமற்ற நிலக்கரியால் மின் நிலைய உபகரணங்கள் சேதமடைவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகளும் ஏற்படுவதாக அவர் எச்சரித்தார். மேலும், இந்தியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் வரிச்சலுகைகள் மூலம் தமது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிலையில், இந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
விவசாயத் துறையிலும் உரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உரத்தின் விலை அதிகரித்துள்ள நிலையிலும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கூப்பன்களுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையிலும், விவசாய உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், நாட்டின் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏனைய நாடுகளுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி முன்வைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அரசாங்கம் சேறுபூசும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, உரத்திற்கான வற் (VAT) வரியை நீக்கி, மக்களுக்குத் தேவையான நிவாரணத் தொகுப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்.


