மத்தல விமான நிலையத்தை மாற்று மையமாக பயன்படுத்த வளைகுடா நாடுகள் ஆர்வம்: அடுத்த வாரம் கள விஜயம்!  

Meiveli Media Team

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை  ஒரு மாற்று விமானப் போக்குவரத்து மையமாக பயன்படுத்துவது குறித்து வளைகுடா நாடுகளின் முன்னணி விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, அடுத்த வாரம் குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்தல விமான நிலையத்திற்கு நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த வசதிகளைப் பார்வையிடுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய விமானப் போக்குவரத்து தளவாடங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்த இலங்கை இலக்கு வைத்துள்ளது. தரையிறங்கும் கட்டணங்களை செலுத்தாமல் மத்தல விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 2026 பெப்ரவரி இறுதியில் ஏற்பட்ட போர் காரணமாக ஈரான், ஈராக், இஸ்ரேல், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளன. இதனால் துபாய், தோஹா மற்றும் அபுதாபி போன்ற பிரதான விமான நிலையங்களின் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில, தென்கிழக்கு இலங்கையில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், இந்தியப் பெருங்கடலின் கிழக்கு-மேற்கு விமானப் பாதையில் நேரடியாக அமைந்துள்ளது. இது போர் வலயத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடமாகும். இங்குள்ள 3,500 மீற்றர் நீளமான ஓடுபாதையில் எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஏர்வேஸ் பயன்படுத்தும் மிகப்பெரிய  விமானங்களைத் தரையிறக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றத.
தற்போது துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் மட்டுமே ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான பாதுகாப்பான போக்குவரத்து மையமாகச் செயற்படுகிறது. இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்தல விமான நிலையம் போன்ற ஒரு மாற்று மையம் வளைகுடா நிறுவனங்களுக்கு அவசியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.