சர்வதேச அமைப்புகளுக்கு கூட்டாக கடிதம் அனுப்பிய எதிர்க்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் ரணில்,சஜித் ,நாமல் ராஜபக்ஷ
Meiveli Media Team

இலங்கையில் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர்சர்வதேச தொழில்முறை அமைப்புகளுக்கு கூட்டு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான பாரதூரமான நிலைமை எமது நாட்டில் சமீபகாலமாக இடம்பெற்று வரும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் குறித்து உங்கள் அவதானத்தை ஈர்க்க விரும்புகிறோம். நவீன ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்திய சுட்டுக்கொலைகள் மற்றும் படுகொலைகள் ஒரு கலாசாரமாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டில் 60-க்கும் மேற்பட்ட உயிர்களும், இந்த புத்தாண்டில் இதுவரை 9 உயிர்களும் பலியாகியுள்ளன. 2026 பெப்ரவரி 13ஆம் திகதி, அதிஉயர் பாதுகாப்பு வலையத்திற்கு அருகில் பட்டப்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் சட்டத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பெப்ரவரி 16 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்தக் கொலை இடம்பெற்று ஒரு மணி நேரத்திற்குள்ளேயே, உயிரிழந்த சட்டத்தரணி போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்காக ஆஜரானவர் என்றும்இ அவரது வாடிக்கையாளர்களின் குற்றச்செயல்களே கொலைக்குக் காரணம் என்றும் பொலிஸார் குற்றம் சுமத்தினர். எவ்வித விசாரணையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பு, குற்றத்தின் பாரதூரத்தைக் குறைத்து பொதுமக்களைத் திசைதிருப்பும் ஒரு பொறுப்பற்ற செயலாகும் எ னஇந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,
நீதித்துறையின் சுதந்திரம் பறிபோகின்றதுஇ சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயமாக்கப்படுவதன் மூலம் குற்றவியல் நீதிச் செயல்பாட்டின் நியாயத்தன்மை பாதிக்கப்படுகின்றது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்மூலம் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றது,
பொலிஸ் திணைக்களம் பாரியளவில் அரசியல்மயமாக்கப்பட்டுள்ள என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டு சட்டத்துறையினரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்துசர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் , சர்வதேச நீதியாளர்கள் ஆணைக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு இந்த மடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான பொருத்தமான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்புகளிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

