மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்: ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை

Meiveli Media Team


மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘டார்ச்’ சின்னத்தில்’ போட்டியிட அனுமதிக்க வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவிலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும். மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும், கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம்.
கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான – நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும். மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட ‘வாக்கு வங்கி வலிமையும்’, தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய ‘நன்மதிப்பு வலிமையும்’கொண்ட கமல்ஹாசன், ‘அவ்வாறு விட்டு விடமாட்டோம்’ என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘டார்ச்’ சின்னத்தில்’ போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் ‘வெல்வோம் ஒன்றாக’ என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்’ எனத் தெரிவித்துள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">