மாதமொன்றில் மூன்று முறை எரிபொருள் விலை அதிகரிப்பு: அரசாங்கத்தின் இயலாமையால் மக்கள் பாரிய நெருக்கடியில் – முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மார்ச் மாத காலப்பகுதிக்குள் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இன்றைய தினம் (24) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகில் நிலவும் யுத்தச் சூழலை விட, தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிலவியபோது, சினோபெக் மற்றும் ஷெல் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சிபெட்கோ நிறுவனத்தின் விலைகளை அரசாங்கம் முறையாக நிர்வகித்ததுடன், தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலைகளை உயர்த்த இடமளிக்கவில்லை என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் இன்று அரசாங்கம் திட்டமிட்டே மக்களைப் பாதிப்புக்குள்ளாக்குவதாகவும், தனியார் நிறுவனங்களின் விலை நிர்ணயத்தில் தலையிடாமல் விலகி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சிங்கப்பூர் சந்தை விலைக்கு ஏற்பவே எரிபொருள் விலை மாற்றப்படுவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுவது முற்றிலும் அப்பட்டமான பொய் எனத் தெரிவித்த அவர், தரையிறக்கும் செலவு மற்றும் ஏனைய செலவுகளைப் பொய்யாகக் காட்டி மக்களை ஏமாற்றி வருவதாகவும், உலகச் சந்தை நிலவரப்படி இதைவிடக் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஆறு மாதங்களாக உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் எவ்விதமான திட்டமிடலும் இருக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றார்.
மேலும், டொலர் மதிப்பு இரண்டு ரூபாவால் மட்டுமே அதிகரிக்கும் என ஜனாதிபதி ஒருபுறம் கூற, மறுபுறம் விலைகள் நூற்றுக்கணக்கில் உயர்த்தப்படுவதாக அவர் சாடினார். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற பாரிய ஊழல் காரணமாகவே இன்று டீசல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மக்கள் மீது சுமை ஏற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் மே தினக் கொண்டாட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், மே முதலாம் திகதி சர்வதேச வைசாக தினமாக அமைவதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மே தின ஊர்வலங்களை நடத்தாது என்றும், அதற்குப் பதிலாக நாடளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்காக ஆசீர்வாத பூசைகளை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், அரசாங்கத்தின் இவ்வாறான மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் இன்று அதற்காகப் பெரிதும் வருந்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.