மன்னாரில் உயர் அழுத்த மின் கம்பிகளில் மோதியதில் பூநாரை (Flamingos) பறவைகள் உயிரிழந்துள்ளன.
Meiveli Media Team

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலைப் பண்ணைகளிலிருந்து மின்சாரத்தை விநியோகிப்பதற்காக, சரணாலயத்திற்கு மேலாக பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகளில் மோதியதில் பூநாரை (Flamingos) பறவைகள் உயிரிழந்துள்ளன.
மன்னார், வங்காலை சரணாலயத்திற்கு மேலே பொருத்தப்பட்டிருந்த காற்றாலை மின் கம்பிகளில் மோதியதில் இரண்டு பூநாரைகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு பறவை காயமடைந்ததாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்ட வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் அவற்றைக் கண்டெடுத்தனர்.
காயமடைந்த பறவைக்கு மன்னார் மாவட்ட வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள வங்காலை சரணாலயம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பூநாரைகளுக்கான மிகவும் பிரபலமான இடமாகும் என்பதோடு, இலங்கையின் மிக முக்கிய பல்லுயிர் சதுப்புநிலப் பகுதியாகும்.
வருடாந்தம் பூநாரைகளைக் காணக்கூடிய இடமாகப் புகழ்பெற்ற வங்காலை சரணாலயத்தில், 150-இகும் மேற்பட்ட பூநாரை பறவைகளைக் காண முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கும் மன்னார் தீவு மக்களின் வாழ்விற்கும் அழிவுகரமான முறையில் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மன்னார் தீவு மக்கள், அவை தீவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை எவ்வாறு குறைக்கின்றன என்பதையும், அவற்றிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு செல்லும் உயர் அழுத்த மின் இணைப்பு கம்பிகள் பறவைகளின் வாழ்விற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக அமையும் என்பதையும் கடந்த காலங்களில் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனர்.


