ஜனாதிபதி செயலக செலவீனம் : 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 925.14 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாகத் தகவல்
Meiveli Media Team

ஜனாதிபதி செயலகம் தனது ஊழியர்களுக்காக 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 925.14 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் நிரந்தர ஊழியர்களுக்காக ரூ.796.53 மில்லியனும், ஏனைய வகை ஊழியர்களுக்காக ரூ. 128.61 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 746 ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். நிரந்தர ஊழியர்களாக 641 பேரும் , ஏனைய ஊழியர்கள் எனும் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையிலான 06 ஊழியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஓய்வுபெற்ற ஐந்து ஊழியர்களும் தற்காலிக ஊழியர்களாக 89 பேரும் ஆலோசகர்களாக 05 பேரும் கடமையாற்றுகின்றனர்.
நிரந்தர ஊழியர்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையில், வேதனத்திற்காக 381.03 மில்லியன் ரூபாயும், மேலதிக நேர கொடுப்பனவுக்காக 59.5 மில்லியன் ரூபாயும்இ இதர கொடுப்பனவுகளுக்காக 307.8 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. அத்துடன் எரிபொருளுக்காக 27.6 மில்லியன், போக்குவரத்துக்காக 13.5 மில்லியன், தொலைபேசி கொடுப்பனவாக 3.6 மில்லியன் மற்றும் சொத்து கடன் கொடுப்பனவாக 3.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏனைய ஊழியர்களுக்கான வேதனத்திற்காக 66.9 மில்லியன் ரூபாயும், மேலதிக நேர கொடுப்பனவுக்காக 16.2 மில்லியன் ரூபாயும், இதர கொடுப்பனவுகளுக்காக 33.6 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. கடந்த 2025 நவம்பரில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாக இருந்த அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 1,252 ஆக இருந்த ஊழியர் எண்ணிக்கை 803 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் செலவுகள் 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனங்கள் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டிவந்தமை குறிப்பிடத்தக்கது.

