கோடீஸ்வரர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் எரிபொருள் மானியம் அவசியமற்றது: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

Meiveli Media Team

எரிபொருள் விலையில் சலுகைகளை வழங்கும் போது, அது தகுதியுடையவர்களைச் சென்றடையும் வகையில் இலக்கு வைக்கப்பட வேண்டும் எனவும், கோடீஸ்வரர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் எரிபொருள் மானியம் அவசியமற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கல்வித் துறையில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அரசு எரிபொருள் மானியத்தை வழங்கத் தொடங்கும் போது, நடுத்தர வர்க்கத்தினர் முதல் ஏழை எளிய மக்கள் வரை பயன்பெறும் வகையில் அதனை வடிவமைக்க வேண்டும். பெரும் வசதி படைத்தவர்களுக்கு இந்த மானியம் தேவையில்லை. தற்போதைய அரசு எரிபொருள் விலையை அதிக சதவீதத்தால் அதிகரித்துள்ளது. எனவே, தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின்படி, எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் முறையான விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறும் அவர் இதன்போது வலியுறுத்தினார். அரசு தனது தேர்தல் கால உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறி வருகின்றது எனவும், எரிபொருள் விலையேற்றம் அனைத்துப் பொருள்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.