இலங்கை விடுத்த அழைப்பிலேயே ஈரானுக்குச் சொந்தமான கப்பல்கள் வந்தன:இலங்கைக்கான ஈரானிய தூதுவர் தெரிவிப்பு
Meiveli Media Team

ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி ‘மிலான் – 2026’ நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பை நோக்கி வருகைதந்ததாகவும், அவ்வேளையிலேயே ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் அறிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடாத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் வலுப்பெற்றிருக்கும் பின்னணியில், இவ்விவகாரம் தொடர்பான சமகால நிலைவரம் மற்றும் ஈரான் நிலைப்பாடு என்பன குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 – 25 ஆம் திகதி வரை நடைபெற்ற ‘மிலான் – 2026’ சர்வதேச கடற்படை பயிற்சி மற்றும் அணிவகுப்பில் கலந்துகொண்டு, இந்தியக் கடற்பரப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர், கடந்த 4 ஆம் திகதி அதிகாலை இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 – 44 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல் நடாத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் – ஐரிஸ் டெனா குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தூதுவர் டெல்கோஷ் இதனைத் தெரிவித்தார். இலங்கை கடற்படைத் தளபதியியின் அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கை கடற்பரப்பை நோக்கி வருகைதந்தன. அக்கப்பலில் இருந்தவர்கள் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயாராக ஆயுதங்களுடன் இருக்கவில்லை. அதுமாத்திரமன்றி அமெரிக்காவின் அத்தாக்குதலில் மரணித்தவர்களில் பலர் படைவீரர்கள் அல்ல. மாறாக அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களாவர். அதேவேளை ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா உள்ளிட்ட கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு கோரிக்கை விடுத்து 11 மணிநேரம் காத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் எம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட போதிய தகவல்கள் இல்லை. அதுபற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம் எனத் தெரிpத்தார்.

