மத்தள விமான நிலையத்தை கோரும் மூன்று வளைகுடா விமான நிறுவனங்கள்

Meiveli Media Team

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலை அடுத்து, எமிரேட்ஸ், கட்டார் ஏர்வேஸ் , மற்றும் எட்டிஹாட் ஆகிய மூன்று முன்னணி வளைகுடா விமான நிறுவனங்கள், மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை ஒரு தற்காலிக மையமாகபயன்படுத்துவதற்கு அனுமதி கோரியுள்ளன. இருப்பினும், இது குறித்த இறுதி முடிவை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் வான்பரப்புகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாற்றுத் திட்டமாக மத்தள விமான நிலையம் கோரப்பட்டுள்ளது.  வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட தூதரகங்கள் இணைந்து இந்த கோரிக்கையை தற்போது பரிசீலித்து வருகின்றன. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பெரிய விமானங்களை நிறுத்துவதற்கு மத்தள விமான நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளே உள்ளன. அத்துடன், பொறியியல் சேவைகள்மற்றும் உணவு வழங்கல் சேவைகள் போன்ற மேலதிக வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.