வல்லரசின் மிரட்டலை மறுப்பதற்கு முதுகெலும்பு இருந்தால் போதும்: சுவீடன் உப்சலா பல்கலைக்கழக பேராசிரியர் அஷோக் ஸ்வெய்ன் இலங்கைக்குப் பாராட்டு
Meiveli Media Team

ஒரு வல்லரசின் மிரட்டலை மறுப்பதற்கு நீங்கள் பெரியவராகவோ அல்லது பலசாலியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக தார்மீக விழுமியங்களும், முதுகெலும்பும் இருந்தால் மாத்திரம் போதும் எனச் சுட்டிக்காட்டியுள்ள சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் மோதல் ஆய்வுத்துறை பேராசிரியர் அஷோக் ஸ்வெய்ன், போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நிராகரித்த இலங்கையின் தீர்மானத்தைப் பாராட்டியுள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ‘ஈரான் கப்பல் விவகாரத்தில் மூன்று கப்பல்கள் நாட்டுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்வதற்கு கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுகுறித்து நாங்கள் ஆராய்ந்துவந்த நிலையில், அன்றைய தினம் மாலை ஐக்கிய அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரப்பட்டது. போர் மூழும் சூழல் நிலவியதால், நாம் இரண்டு தரப்பினரின் கோரிக்கைக்கும் அனுமதி வழங்காமல் நடுநிலையாக செயற்பட்டோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் வெளியிட்ட இந்தத் தகவல் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச்செய்தியானதுடன், இலங்கை அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் சர்வதேச மட்டத்தில் பல்வேறு தரப்பினரதும் பாராட்டைப் பெற்றுவருகிறது. அதற்கமைய சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் மோதல் ஆய்வுத்துறை பேராசிரியர் அஷோக் ஸ்வெய்ன், இலங்கையின் தீர்மானத்தைப் பாராட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். மத்தள விமானநிலையத்தில் இரண்டு போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கு அமெரிக்க விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்திருப்பதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர்,’ஒரு வல்லரசின் மிரட்டலை மறுப்பதற்கு நீங்கள் பெரியவராகவோ அல்லது பலசாலியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக தார்மீக விழுமியங்களும், முதுகெலும்பும் இருந்தால் மாத்திரம் போதும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

