இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

​இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் இன்று (23) வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் உறுதியளித்துள்ளன.

​தற்போதைய போர்ச் சூழலால் விநியோக வலையமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தடையற்ற விநியோகத்தைப் பேணுதல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் (பிரைமா மற்றும் செரண்டிப்) இன்று வர்த்தக அமைச்சிற்கு அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
​எரிபொருள் விலை உயர்வு மற்றும் டொலரின் மதிப்பு அதிகரிப்பு என்பன தமது உற்பத்திச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்குவதே தமது நோக்கம் என அந்நிறுவனங்கள் தெரிவித்தன.
​இதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குத் தேவையான பால்மா மற்றும் கோதுமை மா கையிருப்புகளை விநியோகிக்க முடியும் எனவும், எதிர்வரும் சித்திரை புத்தாண்டு பருவகாலம் முடியும் வரை எவ்வித விலை அதிகரிப்பையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் அந்நிறுவனங்கள் அமைச்சரிடம் உறுதிப்படுத்தின.
​இதேவேளை, எரிபொருள் ஒதுக்கீடு (Quota) காரணமாக விநியோக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நிறுவனங்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தன. இதற்குப் பதிலளித்த அமைச்சர், உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவையாளர்களின் எரிபொருள் தேவைகளை அடையாளம் காணவும், திட்டமிடலை முறைப்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட தரவு சேகரிப்பு திட்டத்தில் பதிவு செய்யுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.
​வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமல்திராஜா, மேலதிக செயலாளர் கில்மா தஹநாயக்க, வர்த்தக மற்றும் ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் குமுது மீகஹகே, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன், லங்கா சதொச தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ, கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோசல வில்பாவ உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.