ஆடைத் தொழில்துறையின் திறன் மேம்பாட்டிற்காக ரத்மலானை – “இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தின்” நவீன பன்முகக் கட்டடம் மாணவர் வசம் ஒப்படைப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ரத்மலானை – இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தில் (SLITA) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன மூன்று மாடி பன்முகக் கட்டடம், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவர்களின் தலைமையில் இன்று (23) மாணவர் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

புடைவை மற்றும் ஆடைத் தொழில்துறையில் உயர்கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்தி, அத்துறையிலான திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மூன்று மாடி பன்முகக் கட்டடமானது, 150 கணினிகளைக் கொண்ட CAD ஆய்வுகூடம், வசதிகள் நிறைந்த கலை மற்றும் ஆடை வடிவமைப்பு ஸ்டுடியோ (Art and Fashion Studio), நவீன கேட்போர் கூடம் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டுமானத் திட்டத்திற்காக அரசாங்கம் 520 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது.
இப்புதிய கல்விச் சூழலானது, புடைவை மற்றும் ஆடைத் தொழில்துறையில் நுழையும் மாணவர்களுக்கும் ஏனைய தொழில் வல்லுநர்களுக்கும் நவீன கல்விச் சூழலை உருவாக்குவதுடன், அவர்களின் புத்தாக்க சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தொழில்சார் நிபுணத்துவத்தை வளர்த்தெடுத்து சர்வதேச சந்தை வாய்ப்புகளை வென்றெடுக்க பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, இலங்கைக்கு அதிகளவிலான ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுத்தரும் பிரதான துறையாக ஆடைத் தொழில்துறை விளங்குவதால், இத்துறையின் விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தி திறன்களை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார். மேலும், சர்வதேச சந்தைக்குத் தேவையான ஆக்கபூர்வமான கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதன் மூலம் இலங்கையை ஆடைத் தயாரிப்புத் துறையின் கல்வி மையமாக மாற்றுவதே தமது அமைச்சினதும் அரசாங்கத்தினதும் முதன்மை இலக்காகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விசேட நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளரும் இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தின் தலைவியுமான திலகா ஜயசுந்தர, அமைச்சின் மேலதிக செயலாளர் சுபத்ரா வல்பொல மற்றும் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் தரங்க நளின் கம்லத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் அமைச்சின் கீழ் இயங்கும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள், கல்விசார் ஊழியர்கள் மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.


