நூற்றாண்டு மகுடம் சூடும் கொழும்பு விவேகானந்தா கல்லூரி: பிரம்மாண்ட நடைபவனியுடன் விழா ஆரம்பம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கல்விச் சேவையில் தடம் பதித்து நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், “நூற்றாண்டின் மகிமை விவேகானந்தா” எனும் கருப்பொருளில் நேற்றைய தினம் (21) மிக விமரிசையாக ஆரம்பமாகின. கல்லூரி அதிபர் திரு. எம். மூவேந்தன் அவர்களின் தலைமையில், பழைய மாணவர் சங்கம், அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலைச் சமூகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவின் தொடக்கமாக பிரம்மாண்டமான நடைபவனி நடைபெற்றது. நேற்று நண்பகல் 12:00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இருந்து சுமார் 5000 த்திற்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரின் பங்களிப்பில் ஆரம்பமான இந்த நடைபவனி, கொழும்பு 02 கொம்பனித்தெருவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை மைதானத்தை சென்றடைந்தது.
நடைபவனியைத் தொடர்ந்து விமானப்படை மைதானத்தில் பிரம்மாண்ட கார்னிவல் மற்றும் வானவேடிக்கைகளுடன் இரவு 12:00 மணி வரை விசேட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கல்லூரி அதிபரின் அறிவிப்பின்படி, இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொடர்ச்சியான பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி ஓய்வுபெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் “மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம்” என்ற விசேட நிகழ்வு, அதனைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் திகதி கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் “தமிழ்த்தாய்க்குத் தாலாட்டு” எனும் தலைப்பில் கலைச் சங்கமம் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை பேராசிரியர் திரு. மௌனகுரு அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். விழாவின் பிரதான நிகழ்வு மார்ச் 24ஆம் திகதி இந்தியத் தூதுவர் மேதகு சந்தோஷ் ஜா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் நூற்றாண்டு நினைவுத் தபால் தலை மற்றும் நாணயம் வெளியிடப்படவுள்ளதுடன், கல்லூரிக்கு பெருமை சேர்த்த 100 மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இறுதியாக ஏப்ரல் 25ஆம் திகதி “விவேகானந்தம் 100” எனும் கல்லூரியின் நூற்றாண்டு நினைவுச் சஞ்சிகை வெளியீட்டுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டங்கள் நிறைவுபெறவுள்ளன.




