காலி முகத்திடலில் மேமன் அமைப்பின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

​புனித ரமழான் மாதத்தின் முப்பது நாட்கள் உபவாசத்தினை நிறைவு செய்த முஸ்லிம்கள் இன்று (21) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளை நாடு முழுவதும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் மேமன் அமைப்பினால் (Memon Association) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பெருநாள் தொழுகை இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.

இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை ஓரத்தில் நடைபெற்ற இந்தத் தொழுகையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் பக்தர்கள் புத்தாடை அணிந்து திரளாகக் கலந்துகொண்டனர்.
​ஒவ்வொரு ஆண்டும் காலி முகத்திடலில் இத்தகைய விசேட தொழுகையை ஏற்பாடு செய்யும் மேமன் அமைப்பினர், இம்முறையும் வருகை தந்த பக்தர்களுக்கான நீர் வசதி, பாதுகாப்பு மற்றும் தொழுகைக்கான விரிப்பு வசதிகளை மிக நேர்த்தியாகவும் முன்னுதாரணமாகவும் செய்திருந்தனர்.

மத வழிபாடுகள் மற்றும் விசேட பெருநாள் பிரசங்கம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவருக்கொருவர் கைலாகு செய்தும் கட்டித்தழுவியும் தமது பெருநாள் வாழ்த்துக்களை மிகவும் உற்சாகத்துடன் பரிமாறிக் கொண்டனர்.
​சகோதரத்துவத்தையும் மனித நேயத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த ஆன்மீகச் சங்கமத்தின் போது, நாட்டின் நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார சுபீட்சம் வேண்டியும் விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.