வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் அமைக்க  சிங்கள தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததாக குற்றச்சாட்டு

Meiveli Media Team

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் தங்கள் காணிகளை இழந்துள்ள மக்களும், வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதோடு போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில், தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய காணிகளை, அவர்களின் அனுமதியின்றி, உப்பளம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு, மகாவலி அதிகார சபையினால் தனியார் காணிகளை உப்பளம் அமைப்பதற்காக வழங்கியமை தொடர்பான முறைப்பாடு’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். உப்பளம் அமைக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமையை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும், எனவே, நிலத்தின் உரிமை திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்குமென, அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அந்தக் காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுத் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தமது காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு,உப்பளம் அமைக்கப்படும் இடத்தைப் பார்வையிடச் சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் காணியை இழந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.