மத்திய கிழக்கு போர் சூழல் இலங்கைக்கு பெரும் சவாலாக அமையும் – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமானது இலங்கை போன்ற ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் இலங்கையின் எரிபொருள் விநியோகம், மின்சாரம், சுற்றுலா மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் இவ்வாறான நெருக்கடிகள் எழும் போது, அதனை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருவதாகவும், உலகளாவிய நெருக்கடியை ஒரு சாட்டாகக் கூறி தனது இயலாமையை மறைக்க முற்படக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்நாட்டில் எரிபொருள் விலையை மேலும் உயர்த்த வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிப்பதோடு, சாதாரண மக்களை பெரும் அசாரண நிலைக்கு தள்ளியுள்ளது. மறுபுறம், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த மின் உற்பத்தியை ஈடுகட்ட நாட்டுக்குக் கொண்டுவரப்படும் டீசலில் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான தரமற்ற நிலக்கரி இறக்குமதிக்கு பொறுப்புக்கூற வேண்டிய எரிசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியானது அடுத்ததாக உர நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும், உரங்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து இறுதியில் நாட்டில் பாரிய ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இத்தகைய நெருக்கடிகளை ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ தனித்து தீர்க்க முடியாது என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளையும் துறைசார் நிபுணர்களையும் அழைத்து முறையானதொரு தேசிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும் என்றும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அரசாங்கத்துடன் நெருக்கமான ஏனையோர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, தற்போதைய சுகாதார அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்தபோது இத்தாக்குதல் குறித்து வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்தார்.

