சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் மூதூர் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் இன்று (20) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபர் குறித்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பேங்காக் நகரில் கொள்வனவு செய்து, அங்கிருந்து இந்தியாவின் பெங்களூரு நகருக்குச் சென்றுள்ளார். பின்னர் பெங்களூருவிலிருந்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் ‘இண்டிகோ’ (IndiGo) விமான சேவைக்குச் சொந்தமான 6E-1183 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் சூட்சுமமான முறையில் இரகசியப் பதுக்கிடங்களை அமைத்து, அவற்றில் நான்கு பாக்கெட்டுகளாக பொதி செய்யப்பட்டிருந்த 05 கிலோ 140 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை சோதனையின் போது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

