சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026 : தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்
Meiveli Media Team

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் பல வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்இடம்பெற்றுள்ளன. தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்:
சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.
தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்:
தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும். பெண்களுக்குத் தனித்தொகுதி:
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.
மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி:
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.
தமிழர்களுக்கு முன்னுரிமை:
தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதோடு, தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை, அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை, மணல் கொள்ளைத் தடுப்பு, வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம், ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி என்பன தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

