இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட தடை
Meiveli Media Team

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை வானூர்திப்படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வானூர்திப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் பாதுகாப்பு வலயங்களில் அனுமதி இன்றி ட்ரோன்களை இயக்கிய நபர்களுக்கு எதிராக இதற்கு முன்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ட்ரோன்களைப் பயன்படுத்த விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள், நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு அமைவாக உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ட்ரோன் இயக்குபவர்கள் சட்ட ரீதியான சிக்கல்கள் அல்லது சிரமங்களுக்கு உள்ளாவதைத் தடுப்பதையுமே இந்த அறிவிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

