கொழும்பு மாநகரில் வாகன நிறுத்தக் கட்டணம் தற்காலிகமாக ரத்து: மாநகர சபை அறிவிப்பு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனங்களை நிறுத்துவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக ரத்து செய்ய கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் இது குறித்த விசேட அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
தற்போது நிலவி வரும் உலகளாவிய யுத்தச் சூழல் மற்றும் அதன் விளைவாக மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசாரின் ஆலோசனையின் பேரில், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், நிதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் வாகன நிறுத்த இடங்களில் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. எனினும், புதிய தீர்மானத்தின்படி அனைத்து வாகன நிறுத்த இடங்களிலும் (Parking Bays) மறு அறிவித்தல் வரை எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமைகள் சீராகி, பொருளாதாரம் வழமைக்குத் திரும்பும் தருவாயில் இது குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் மேலும் தெரிவித்தார்.

