இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நீண்ட நேர மின்சாரத்தடை ஏற்படும் அபாயம்
Meiveli Media Team

இலங்கையின் மின்சார உற்பத்தி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும்இ, தரம் குறைந்த நிலக்கரி மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரத்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் திறன் குறைவடைந்துள்ளதாலும், மத்திய கிழக்கு போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் கப்பல்கள் வருகை தாமதமாவதாலும், இரவு நேரங்களில் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமையான ஒன்றாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பகல் நேர மின் விநியோகத்திற்கும் கடும் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் உற்பத்திப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்ட நிலக்கரி மின் நிலையங்கள், தரம் குறைந்த நிலக்கரி காரணமாக தற்போது 120 – 150 மெகாவாட் குறைவான மின்சாரத்தையே உற்பத்தி செய்வதாகக் குறிப்பிட்டார். ‘இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்பு, மின் உற்பத்தி இயந்திரங்களை முழுத் திறனுடன் இயக்குவதற்குப் போதுமானதாக இல்லை’ என அவர் கூறினார். நிச்சயமற்ற எரிபொருள் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையில், மின் விநியோகத்தைத் தடையின்றி வழங்க முயல்வது பாரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும்’ என அந்த அதிகாரி எச்சரித்தார். இதன் படிஇ இரவு நேரங்களில் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் துண்டிக்கப்படலாம். எரிபொருள் கையிருப்பு மேலும் குறைந்தால், தினசரி மின்வெட்டு 3 முதல் 4 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும்.

